×

நாட்டை பாதுகாப்பதிலும், சவால்களின் போதும் விமானப்படையின் செயல்திறன் மெச்சத்தக்கது!: பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்டோர் இந்திய விமானப்படை தின வாழ்த்து..!!

டெல்லி: இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி விமானப்படை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹிண்டன் தளத்தில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. உத்திரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அனுவகுப்பு நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக 89வது ஆண்டு விழாவை ஒட்டி அதிகாரிகள் முன்னிலையில் அணிவகுப்பு, இசைநிகழ்ச்சி, விமான சாகச ஒத்திகைகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி:

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை பாதுகாப்பதிலும், சவால்களின் போதும் விமானப்படையின் செயல்திறன் மெச்சத்தக்கது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:

இந்திய விமானப்படை தினத்தின் 89வது கொண்டாட்டத்தை ஒட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படையில் பணியாற்றும் வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விமானப்படையின் சமாதானம், போரின் போது திறமை மற்றும் திறன் ஆகியவற்றால் நாடே பெருமை கொள்கிறது. இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பான சேவைகள் எப்போதும் தொடரும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். திறன் மிகுந்த விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். தேசத்திற்கான சேவையில் உறுதியாக உள்ள விமானப்படை வீரர்களால் நாடே பெருமை கொள்கிறது. பல்வேறு சவால்களை சாதாரணமாக சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக விமானப்படை வீரர்கள் உள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Modi ,Indian Air Force Day , Air Force, Performance, Prime Minister Modi, President
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...