×

தாமாக வழக்கு பதிந்து உத்தரவு பிறப்பிக்க பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுக்காப்பு குறித்த அனைத்து விவகாரங்களையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தான் விசாரித்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக வழக்கு பதிவு செய்து உத்தரவு வழங்கி வருகிறது. இதில் தீர்ப்பாயம் நீதிமன்றத்துக்கு இணையானது கிடையாது. மேலும் தீர்ப்பாயம் என்பது சட்டத்தின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010ம் ஆண்டு சட்டம் பிரிவு 18ன் படி தாக்கல் செய்யப்படும் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும். தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில்,‘‘தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும். இதில் தீர்ப்பாயம் என்பது நீதிமன்றத்துக்கு இணையானது கிடையாது’’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘சுற்றுச்சூழல் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஒரு தீர்வு காணும் விதமாக தான் தாமாக முன்வந்து தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்கிறது. அதனால் இதுதொடர்பான விவகாரத்தில் அவசரநிலை கருதி தாமாக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான தீர்ப்பை கடந்த மாதம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,‘‘சுற்றுச்சூழல் விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டு அதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து முடித்து வைத்தனர்.

இதில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்ற உத்தரவுக்கு பிறகு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது வழக்கை விசாரிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Tags : Green Tribunal ,Supreme Court , Case, Order, Green Tribunal, Supreme Court
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...