திருத்தணி முருகன் கோயிலில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

திருத்தணி:  திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் மத்தூர் அம்மன் கோயில், திருவாலங்காடு, கரிம்பேடு சிவன் கோயில் உள்பட 29 கோயில்கள் உள்ளது. இது தவிர கோயில்களுக்கு சொந்தமான விடுதி, அலுவலகம் மற்றும் சரவண பொய்கை குளம் ஆகியவற்றையும் பராமரித்து வருகின்றனர். இங்கு துப்புரவு பணியாளர்கள் 150 பேர், மாதம் 5 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் ஒரு மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் கடந்த 4 மாதமாக பழைய சம்பளம் கூட வங்கி கணக்குக்கு வரவில்லை. இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில், துப்புரவு பெண் தொழிலாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று அதிகாலை மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை முன் திரண்டனர். நுழைவாயில் பகுதியில் அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் திருத்தணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related Stories:

More
>