×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அரசு பள்ளியின் சீக்கிய முதல்வர், இந்து ஆசிரியர் சுட்டுக்கொலை: மற்ற மத ஆசிரியர்களை ஒதுக்கி விட்டு வெளியே இழுத்து வந்து சுட்டு தள்ளினர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை பாதுகாப்பு படைகள் படிப்படியாக ஒழித்து, வெற்றி கண்டுள்ளன. இதனால், பொது இடங்களில் பெரியளவில் தாக்குதல் நடத்த முடியாமல் அவர்கள் உள்ளனர். மேலும், பாகிஸ்தான் எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால், அங்கிருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்குள் உள்ள  தீவிரவாதிகளில் தினமும் 2, 3 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால், மக்களிடம் தீவிரவாதிகள் மீதான பயம் குறைந்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக சிறுபான்மை மக்களான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. மத வழிபாட்டு நிகழ்ச்சிகள், பண்டிகை கொண்டாட்டம் போன்றவையும் அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில், பாதுகாப்பு படைகளின் மீதான தாக்குதலை திசை திருப்பி, சமீப காலமாக பாஜ உள்ளிட்ட இந்து ஆதரவு கட்சிகள், அமைப்பினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில், கடந்த சில நாட்களாக பொதுமக்களை சுட்டுக் கொல்லும் உத்தியை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 3 இஸ்லாமியர்களை அவர்கள் கொன்றனர். கடந்த செவ்வாயன்று, ஸ்ரீநகரின் பிரபல ‘பிந்த்ரோ மெடிகேட்’ என்ற மருந்து கடையின் உரிமையாளர் மக்கான் லால் பிந்த்ரோவை கடையில் புகுந்து சுட்டுக் கொன்றனர். அடுத்த சில மணி நேரத்தில் ஹவால் பகுதியில் சாலையில் பேல்பூரி விற்பவரை கொன்றனர். தொடர்ந்து, பண்டிபோரா மாவட்டத்தில் நாய்ட்காயில் முகமது சபீ லோனி என்பவரும் கொல்லப்பட்டார். இதனால், ஜம்மு காஷ்மீர் மக்களிடம் பீதி நிலவுகிறது. பிந்த்ரோவின் படுகொலைக்கு சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் 2  பேரை தீவிரவாதிகள் நேற்று வெளியே இழுத்து வந்து சுட்டு கொன்றது, மக்களின் அச்சத்தை மேலும் அதிகமாக்கி இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் இத்கா சங்கம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று இந்த பள்ளியில் உள்ள அலுவலகத்தில் பள்ளியின் முதல்வர் சுக்விந்தர் கவுர் தலைமையில் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, திடீரென ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த 2 தீவிரவாதிகள் அந்த கூட்டத்தில் இருந்த முஸ்லிம் ஆசிரியர்களை விட்டு விட்டு, சீக்கிய மதத்தை சேர்ந்த முதல்வர் சுக்விந்தரையும், இந்து மதத்தை சேர்ந்த ஆசிரியர் தீபக் சந்த்தையும் வெளியே இழுத்து வந்தனர். அங்கு அவர்களை நிற்க வைத்து சுட்டு தள்ளிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழுந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பயத்தை ஏற்படுத்தவே தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி ஜெனரல் தில்பாக் சிங் கூறுகையில்,  ‘‘பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டிதனமானது. சமூகத்துக்காக பணியாற்றும், யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவிகள்  குறிவைக்கப்படுகின்றனர். இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வழிகாட்டுதலின் பேரில் தீவிரவாதிகள் இதை செய்கின்றனர். அவர்களின் சதியை முறியடிப்போம்,” என்றார்.


Tags : Kashmir , Kashmir, militants, government school, shooting
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...