×

கடைசி லீக் ஆட்டத்தில் ராகுல் அதிரடியால் பஞ்சாப் வெற்றி: டூபிளிசிஸ் ஆடியும் பலனில்லை

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடர்கதையானது. பஞ்சாப்  வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 12,  மெயீன் 0, உத்தப்பா 2, ராயுடு 4,  கேப்டன் தோனி 12 ரன் என அடுத்தடுத்து  ஆட்டமிழக்க சென்னை 100ரன்னை தொடுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டூபிளிசிஸ் அதிரடி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை தொடர,  சென்னை ஸ்கோர் உயர்ந்தது. கடைசி 3 பந்துகள் இருக்கும் போது டூபிளிசிஸ் 76(55பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சென்னை 20ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 134ரன் எடுத்தது. ஜடேஜா 17*,  பிராவோ 4* ரன்னுடன் களத்தில் இருந்தனர். அசத்தலாக பந்து வீசிய பஞ்சாப்பின் அர்ஷ்தீப், ஜோர்டன் தலா 2, ஷமி , பிஷ்னாய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களம் கண்டது.  தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ராகுல் ஒருப்பக்கம் நிலைத்து நின்று ஆட,  அகர்வால் 12, ஷர்பரஸ் கான் 0,  ஷாருக்கான் 8,  மார்க்ராம் 13ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ராகுல்  42 பந்தில்  7 பவுண்டரி, 8 சிக்சர் விளாசி  98* ரன் குவித்தார். அதனால் பஞ்சாப் 13ஓவரில்  4விக்கெட்களை இழந்து  139ரன் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.   சென்னை தரப்பில் ஷர்துல் 3,  சாஹர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த அபார வெற்றியின் மூலம்  12 புள்ளிகளாக உயர்ந் ததுடன்  பஞ்சாப்பின்  ரன் ரேட்டும்  - 0.241லிருந்து  -0.001 ஆக உயர்ந்தது. அதனால்  மும்பையை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் கொல்கத்தா-ராஜஸ்தான் ஆட்டத்தின் முடிவும், இன்று நடக்க உள்ள  ஐதராபாத்-மும்பை ஆட்டத்தின் முடிவுதான் அந்த இடத்தை  தீர்மானிக்கும். அதேபோல்  சென்னை தோல்வி காரணமாக  டெல்லியின் முதல் இடம் உறுதியானது.  ஆனால் சென்னைக்கு 2வது இடமா, 3வது இடமா என்பது இன்று நடைபெற உள்ள டெல்லி-பெங்களூர் ஆட்டம் முடிவு செய்யும்.

Tags : Punjab ,Rahul ,Audi , IPL, Rahul, Punjab, Two Bliss
× RELATED முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்