×

மண்டல கால பூஜை சபரிமலையில் தரிசனத்துக்கு தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், வீணா ஜார்ஜ், சசிதரன், ஆண்டனி ராஜ், ரோஷி அகஸ்டின், டிஜிபி அனில் காந்த், திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர்கள், ஐயப்ப சேவா சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மண்டல கால பூஜையின்போது தொடக்கக் கட்டத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. தேவைப்பட்டால் வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். தரிசனத்திற்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு வழங்கப்படும். தரிசனம் முடிந்த உடன்  பக்தர்கள் பம்பைக்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும். இவ்வருடமும் சன்னிதானத்தில் தங்க அனுமதி இல்லை. எருமேலி பாதை மற்றும் புல்மேடு வழியாக சன்னிதானத்திற்கு செல்ல  அனுமதி கிடையாது.  பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே  அனுமதிக்கப்படும். இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

Tags : Sabarimala , Zonal Puja, Sabarimala, Devotees, Permission
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு