×

அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே  கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு உலை கழிவுகள் கிடங்கு தொடர்பான வழக்கில் இதுபோன்ற  ரஷ்ய தொழில்நுட்ப வகை அழுத்தம் ஊட்டப்படட கனநீர அணுஉலை எரிபொருள் சார்ந்த அணுமின் நிலையங்களில், நெடுங்கால உலைக்கழிவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்கு வசதிகள் விஷயத்தில் இந்தியாவுக்கு முன்அனுபவம் ஏதும் இல்லை என்று  இந்திய அணுசக்தி கழகம் 6.12.2017 அன்று சமர்ப்பித்த தனது  பதில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி முதல் இரண்டு அலகுகளின் கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க  ஒன்றிய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட   அனைத்து அணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாக பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப்பட வேண்டும்.இந்த நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்பட வேண்டும். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : DR ,Palu , Nuclear Power Station, Waste, Permission, Prime Minister, D.R.Palu
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!