×

வெளி நாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கிய 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: வனத்துறை நடவடிக்கை

சென்னை:  சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெளி நாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாகவும்,ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நுண்ணறிவு பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், சென்னை வன காவல் நிலையத்தின் வனச்சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு, சம்மந்தப்பட்ட குடோன் பூட்டப்பட்டு இருந்தது. அதன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 2 டன் செம்மரக்கட்டைகள் பார்சல் செய்து, வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான இந்த குடோனை, கடந்த 10 மாதங்களுக்கு முன், மதுரவாயலை சேர்ந்த அமீர் என்பவர் ஷோபா மற்றும் மெத்தைகள் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்காக வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. அமீரை தேடியபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. அவரை பிடித்தால்தான், செம்மரக்கட்டைகளை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது.

 அவற்றை எந்த நாட்டிற்கு கடத்த முயன்றனர், இதில் தொடர்புடைய நபர்கள் போன்ற தகவல்கள் தெரிய வரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


Tags : Gudon , Foreign, Cotton, Sheepskin, Forestry,
× RELATED கரூரில் நாய்கள் கடித்து மான் பலி