இந்து எஸ்சி ஜாதி சான்றிதழ் ரத்துக்கு கண்டனம் குடும்பத்தினருடன் சர்ச்சுக்கு செல்வதால் ஜாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணத்தைச் சேர்ந்த டாக்டர் முனீஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்து எஸ்சி (தேவேந்திர குல வேளாளர் ) பிரிவைச் சேர்ந்த நான், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துள்ளேன். எனது பெற்றோரும் அதே பிரிவினர்தான். முறையாக ஜாதி சான்றிதழ் ெபற்றுள்ளேன். ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக நியமிக்கப்பட்டேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சாமுவேலை திருமணம் செய்தேன். ஆனால், நான் மதம் மாறவில்லை.  கடந்த 2007ல் டிஎன்பிஎஸ்சி நடத்திய உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு விண்ணப்பித்து வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றேன்.

இந்து முறைப்படி நடந்த திருமண வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தேன். கடந்த 2012 , 2013ல் ராமநாதபுரம் கலெக்டர் முன் ஆஜராகி ஆவணங்கள் குறித்து விளக்கமளித்தேன். அவர் ஏற்கவில்லை. ஜாதி சான்றிதழை பரிசீலிக்கும் விழிப்புணர்வு குழு அறிக்கை அடிப்படையில், எனது ஜாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, அந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் வக்கீல் மயில்வாகன ராஜேந்திரன், ‘‘மனுதாரர் கிளினிக் மற்றும் வீட்டில் கிறிஸ்தவம் தொடர்பான சின்னங்களும், வழிபாடும் நடப்பதாகவும், குடும்பத்தினருடன் சர்ச் செல்வதாகவும் கூறி ஜாதி சான்றிதழை ரத்து செய்துள்ளது ஏற்புடையதல்ல’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் பெற்றோர் ஜாதியின் படியே மனுதாரரும் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார். வீட்டிலும், கிளினிக்கிலும் கிறிஸ்தவ மத அடையாளங்கள் உள்ளதால் இவரும் கிறிஸ்தவர் என்று கூறமுடியாது. குடும்பத்திலுள்ள கணவன் மற்றும் குழந்தைகளுடன் தேவாலயத்திற்கு செல்கிறார் என்பதால் இவரும் கிறிஸ்தவராகி விட்டார் என்பது ஏற்புடையதல்ல.

இதையே காரணமாகக் கொண்டு அவரது ஜாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது. ஒவ்வொருவரும், மற்ற மதம், ஜாதியை சார்ந்தவரை மரியாதையுடன் நடத்த வேண்டும். பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதைத்தான் அரசியலமைப்பு சட்டமும் கூறுகிறது. ஜாதி சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் அதிகாரிகள் மனிதாபிமானத்துடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். மனுதாரரின் ஜாதி சான்றிதழ் ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

Related Stories:

More
>