×

அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளுடன் போட்டிபோடும் வகையில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் திருக்குளம், நந்தவனம், கோயில் சுவாமி புறப்பாடு வாகனம், அன்னதானக் கூடம், திருத்தேர் ஆகியவற்றை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்ரியா, செயல் அலுவலர் தமிழ்செல்வி உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கோயிலில் ரூ.3 கோடியில் கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்படும். ரூ.15 லட்சம் செலவில் நல்ல வடிவமைப்பில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுவாமி புறப்பாடு வாகனங்கள் புதுப்பிக்கப்படும். கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள சில கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருத்தில் உள்ளதாக பல இடங்களில் இருந்து தகவல் வருகிறது. சில கோயில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்களில் உள்ளன. இது குறித்து தீர ஆய்வு செய்து, முதலமைச்சர் அனுமதியுடன் இரண்டு மொழிகளிலும் கோயில்களின் பெயர்கள் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிக்கு உயர்கல்வித்துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம்.

அதனை தொடர்ந்து சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீகபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அம்பளிக்கை என்ற தனியார் இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என கோயில் பெயர்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.

இக்கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மிக பாடபிரிவுகள் இடம்பெறவுள்ளன.
சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடைபெறும்.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படியே கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோயில் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார். போராட வலுவான காரணம் இல்லாததால் பாஜவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காளிகாம்பாள் கோயிலில் பாஜ போராட்டம் நடத்துவதால் இன்று (நேற்று) ஒரு நாள் பக்தர்களின் வழிபாடு பாதிக்கப்படும். ஏற்கனவே 4 நாட்கள் கோயில்கள் திறந்துள்ள நிலையில், பாஜவின் போராட்டத்தால் 3 நாட்கள் ஆகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அதிகளவில் வருவதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கலெக்டரிடம் பேசி, செவ்வாய்க்கிழமை கோயில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Treasury ,Minister ,Sekarbabu , Colleges to be started on behalf of the Treasury will be run in competition with private colleges: Minister Sekarbabu Information
× RELATED முதலில் டோக்கன் வாங்கியது திமுக...