×

வானதி சீனிவாசனை தொடர்ந்து தேசிய அளவில் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா நடிகை குஷ்புவுக்கு புதிய பொறுப்பு: பாஜக மேலிடம் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சரானார். இதைத் தொடர்ந்து அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பதவியை பிடிக்க பாஜவில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக பாஜ புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஜூலை 8ம் தேதி நியமிக்கப்பட்டார். இதனால், பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரசில் இருந்து பாஜவில் இணைந்த நடிகை குஷ்புவும் தனக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பாஜ தேசிய தலைமையிலான பதவியிலும் தலைவர்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், தமிழக பாஜவினர் கட்சி மேலிடத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதை சரிக்கட்டும் வகையில் பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் பதவி வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய துணை தலைவர், தேசிய பொது செயலாளர், தேசிய செயலாளர், சிறப்பு அழைப்பாளர்கள், தேசிய செய்தி தொடர்பாளர், அணியின் தலைவர்கள் உள்ளிட்டோர் பட்டியலை பாஜ தேசிய தலைமை நேற்று வெளியிட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக எச்.ராஜா, நடிகை குஷ்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள் ளவர்கள் தேசிய நிர்வா கிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக  சட்டப்பேரவை பாஜ கட்சி தலைவராக நயினார் நாகேந்திரன், பாஜ மாநில பொது செயலாளர் (அமைப்பு) கேசவ விநாயகம், தமிழக பாஜ பொறுப்பாளராக சி.டி.ரவி, இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Vanathi Srinivasan ,Pon.Radhakrishnan ,H.Raja ,Khushbu ,BJP , Pon.Radhakrishnan, H.Raja actress Khushbu gets new responsibility at national level following Vanathi Srinivasan: BJP announces
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்