×

உள்ளாட்சி தேர்தல் 2ம்கட்ட பிரசாரம் நிறைவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் நாளை வாக்குப்பதிவு: முதற்கட்ட தேர்தலில் 74.37% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 74.37 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், நாளை (9ம் தேதி) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 23,998 இடங்களுக்கு நேற்று முன்தினம் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மொத்த மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9. மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140. இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 78 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பொதுமக்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தது. 9 மாவட்டங்களிலும் மொத்தம் 39,408 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவை இணையதளம் மூலம் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்தனர். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் 80 சதவீதம், செங்கல்பட்டில் 67 சதவீதம், விழுப்புரம் 81.36 சதவீதம், கள்ளக்குறிச்சி 72 சதவீதம், வேலூரில் 67 சதவீதம், ராணிப்பேட்டை 81 சதவீதம், திருப்பத்தூர் 78 சதவீதம், திருநெல்வேலி 69 சதவீதம், தென்காசி 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் சனிக்கிழமை (9ம் தேதி) நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 62 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக 39 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக மீதி உள்ள 35 இடங்களுக்கு சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது. இதேபோல், மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581. இதில் முதல்கட்டமாக, 12,252 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக 10,329 இடங்களுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதனால், வேட்பாளர்கள் தங்களின் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். நேற்று காலை முதலே வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததால் 6 மணிக்கு பிறகு வெளியூரை சேர்ந்தவர்கள் திருமண மண்டபங்கள், விடுதிகளில் தங்கி இருக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி தங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

Tags : Kanchipuram ,Chengalpattu , 2 phase of local body election campaign ends in 9 districts including Kanchipuram, Chengalpattu tomorrow: 74.37% turnout in the first phase of the election
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...