×

பாராலிம்பிக் உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  சென்னை தலைமை செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஓலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார்.  டோக்கியோ பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதேபோல், 2020ம் ஆண்டு பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் ஆர். வைஷாலி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கினார்.

நடப்பாண்டில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி மற்றும் பா.சவிதாஸ்ரீ  ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு ரூ.3 லட்சம் என மொத்தம் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டில் கஜகஸ்தானில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பா.அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 2019ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ப.இனியன், 2019ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி.வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்கு தலா 5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், 2020ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல், மு.பிரனேஷ், 2021ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 3 லட்சம் என மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி சிறப்பித்தார்.

Tags : Paralympics ,Mariappan ,Chief Minister ,MK Stalin , Rs 3.98 crore incentive for medalists in various competitions including Paralympics: Rs 2 crore for Mariappan; Presented by Chief Minister MK Stalin
× RELATED மூதாட்டி தீக்குளித்து தற்கொலை