×

24 மணிநேரமும் துப்பாக்கி பாதுகாப்புடன் நாகராஜாகோயிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கி இருக்கிறது. தற்போது இந்த மையத்தில் 2 ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதையொட்டி 24 மணிநேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் சுமார் 490 கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் 1000 ஆண்டுகளை கடந்த மிக பழமையானவை ஆகும். இந்தக் கோயில்களில் அதிக மதிப்புடைய ஐம்பொன் சிலைகள் உள்ளன. குறிப்பாக திற்பரப்பு உள்ளிட்ட 2 கோயில்களில் சுவாமி விக்ரகங்கள் தங்கத்தில் இருக்கின்றன.

தமிழகத்தில் தொடர்ச்சியாக சிலை திருட்டு சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து கோயில்களில் உள்ள பழமைவாய்ந்த சிலைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் திருமேனி உலோக பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் பழமையான சிலைகளை பாதுகாக்கும் வகையில் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உலோக திருமேனி மையம் அமைக்கப்பட்டது. மூன்றடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த உலோக திருமேனி பாதுகாப்பு மையம் செயல்படாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குமரி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது முக்கிய கோயில்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நாகராஜாகோயிலுக்கும் வந்தார்.

அப்போது உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 2 ஐம்பொன் சிலைகள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. திருமேனி மையத்தில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இந்த உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் அபாய அலாரம், பாதுகாப்பு பெட்டகம், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.  இது  குறித்து அறநிலையத் துறை அதிகாரி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத சிலைகள் அந்தந்தக் கோயில்களில் இருக்கின்றன.

இவ்வாறு இருக்கக்கூடிய பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் படி உலோக திருமேனி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. தற்போது இதில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 2 ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இது தவிர இன்னும் பல கோயில்களில் இருந்தும்  ஐம்பொன் சிலைகள், பொருட்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படும் என்றனர்.

Tags : Metallic Tirumani Safety Center ,Nagarajakoi , Metal Lord Safety Center
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...