குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பூவிருந்தவல்லி அருகே குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை 4 வாரத்தில் மீட்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பூவிருந்தவல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர்

மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் கோயில் நிலத்தை குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

ஆக்கிரமித்த இடத்துக்கு குத்தகை தொகை வழங்குமாறு தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 2015ல் குயின்ஸ் லேண்ட் வழக்கு தொடர்ந்தது. 21 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தியதற்காக ரூ.2.75 கோடி செலுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர்.

நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 1995ஆம் ஆண்டில் சம்மந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வருவாய் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால், இதனை பயன்படுத்திக்கொண்டு குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதன் குத்தகை காலம் 1998ல் முடிவடைந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 1998க்கு பிறகு குயின்ஸ் லேண்ட் நிறுவனம் அத்துமீறி ஆக்கிரமித்ததாகவும் வாதிடப்பட்டது.

வருவாய் துறையினருக்கும் இந்து அறநிலையத்துறையினருக்கும் இடையே உள்ள பிரச்னையை தங்களுக்கு சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்தி கொண்டதாகவும் வாதத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த கோயில் நிலங்களை 4 வாரத்திற்குள் மீட்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த நிறுவனம் வருவாய்த்துறைக்கு ரூ.1.08 கோடியும், கோயிலுக்கு ரூ.9.5 கோடியும் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டாட்சியர் உத்தரவுக்கு எதிரான குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்தின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: