×

பண்ணாரி அம்மன் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம்: யானை தாக்கி விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி அம்மன் கோயில் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி  தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்திற்குள் புகுந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அப்போது கோயில் வளாகத்தில் இருந்த தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை தும்பிக்கையால் தள்ளி கீழே போட்டு மிதித்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

அங்கிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குருமூர்த்தி (50) என்பவரது விவசாய தோட்டத்திற்குள் நுழைந்தது. யானையைக் கண்ட விவசாயி குருமூர்த்தி அக்கம்பக்கத்து விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானையை விரட்ட முற்பட்டார். அப்போது காட்டு யானை குருமூர்த்தியை துரத்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். காட்டு யானை தும்பிக்கையால் குருமூர்த்தியை தாக்கியதில் அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்த விவசாயிகள் காயமடைந்த குருமூர்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பவானிசாகர் வனத்துறையினர் முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குருமூர்த்தியை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Temple of Ranjari Amman , Elephant, farmer
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...