×

ஜம்முவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சுட்டுக்‍கொலை!: மக்‍களுக்‍கு பாதுகாப்பு அளிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி சாடல்..!!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் ஈட்கா சங்கம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பண மதிப்பிழைப்பு நடவடிக்கை மற்றும் 370வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில், தற்போது பயங்கரவாதம் நிறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காஷ்மீர் சகோதர, சகோதரிகள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Tags : Jammu , Jammu, Teachers, Massacre, Union Government, Rahul Gandhi
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...