லண்டனில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண்ணுக்கு சுக பிரசவம்

திருவனந்தபுரம்: லண்டன்- கொச்சி ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிக்கு சுக பிரசவம் நடந்தது. கொச்சி - லண்டன் இடையே ஏர் இந்தியாவின் நேரடி விமான போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு லண்டனில் இருந்து வழக்கம் போல் விமானம் புறப்பட்டது. விமானத்தை பெண் பைலட் சோமா சுர் இயக்கினார். மொத்தம் 210 பயணிகள் இருந்தனர். இதில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான மரியா பிலிப் என்ற இளம் பெண்ணும் பயணம் செய்தார்.

லண்டனில் இருந்து விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே மரியா பிலிப்புக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து உடனே விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் டாக்டர்கள் இருக்கிறார்களா? என்று ஊழியர்கள் பயண பட்டியலை பார்த்தனர். அப்போது விமானத்தில் 2 டாக்டர்கள், 4 நர்சுகள் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பிரசவம் பார்க்க டாக்டர்கள் முடிவு செய்தனர். உடனே விமானத்தில் உணவு வைத்திருக்கும் அறையை பிரசவ அறையாக மாற்றினர். தொடர்ந்து பிரசவ அறை தயாரானதும் மரியா பிலிப்பை அறைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். இருந்த போதிலும் குறைந்தது 3 மணி நேரத்திலாவது மருத்துவமனையில் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.

அப்போது விமானம் கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 2 மணி நேர பயணத்தில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தை அடைய முடியும். ஆனால் பிராங்பர்ட்டில் வழக்கமாக இந்த விமானம் தரையிறங்காது என்பதால் பைலட் சோமா சுர் அங்கு இறங்க ஏர் இந்தியா கட்டுப்பாட்டு அறைக்கு அனுமதி கேட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் பிராங்பர்ட்டில் இறங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

உடனே பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து 6 மணி நேரம் தாமதமாக ஏர் இந்தியா விமானம் பிராங்பர்ட்டில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்டது. பெண் பயணிக்கு சுகப்பிரசவம் நடக்க உதவி புரிந்த டாக்டர்கள், நர்சுகள், பைலட், விமான ஊழியர்களுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

More