×

முழு இதயத்தையும் அர்ப்பணித்து ஆடினோம்: கேப்டன் வில்லியம்சன் பேட்டி

அபுதாபி: ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 52-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் ஜேசன்ராய் (44), கேப்டன் வில்லியம்சன் (31) ரன் எடுத்தனர். பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் 3, கிறிஸ்டியன் 2, சாஹல் மற்றும் கார்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி துவக்க ஆட்டக்காரர் விராட்கோஹ்லி-தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விராட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ்டியன் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த கர் பரத் 12 ரன்களில் ஆட்டமிழக்க, தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்த மேக்ஸ்வேல் தனது மிரட்டல் ஆட்டம் மூலம் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து வந்த சபாஸ் அகமது 14 ரன்களில் கேட்ச் ஆக, அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

கார்டன் 2 ரன்களும், டி வில்லியர்ஸ் 19 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் மாலில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு புவனேஷ்வர்குமார், ஹோல்டர், உம்ரான்மாலிக் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதே காரணம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘எங்கள் அணிக்கு இந்த தொடர் கடும் நெருக்கடியாகத்தான் உள்ளது. ஆனால் இதுபோன்ற சிறிய முன்னேற்றங்கள் அணியில் உள்ளது தற்போது மகிழ்ச்சியை தருகிறது. இப்போட்டியில் ஆடுகளத்தின் தன்மை கடும் சவாலை அளித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் முழு இதயத்தையும் அர்ப்பணித்து ஆடியுள்ளோம். குறிப்பாக பவர்பிளேயில் அதிகபட்ச உழைப்பை காட்டியுள்ளோம். பந்து ஆடுகளத்தில் இருந்து மிகவும் மந்தமாக எழும்பியது.

இதற்காக 2 அடி பின் நகர்ந்து, பிறகு மீண்டும் அட்ஜெஸ்ட் செய்து ஒரு அடி முன்னேறி பந்தை எதிர்கொண்டு அடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு அவகாசம் இருந்தது. இந்த டைமிங்கை புரிந்து கொண்டோம். மேக்ஸ்வெல்லை வீழ்த்தியது சிறப்பான தருணம். அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினார். வலைப்பயிற்சியின் போது, அவரது பந்து வீச்சை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நன்றாக பந்துவீசுவார் என்பதை நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. இவரைப் போன்ற இளம் வீரர்கள்தான இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்.

பெங்களூரு கேப்டன் கோஹ்லி கூறுகையில், ``மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றிவிட்டது. படிக்கல்லும் சிறப்பாக ஆடினார். ஆனால் களத்தில் டிவில்லியர்ஸ் இருக்கும் வரை, வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மை. கடைசி ஓவரை புவனேஸ்வர் நன்றாக வீசி, வெற்றியை பறித்துக் கொண்டார்’’ என்றார்.

உம்ரான்மாலிக் 153 கி.மீ. வேகம்

ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் முதல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2-வது ஆட்டத்திலும் கட்டுக்கோப்பான மற்றும் துல்லியமானபந்துவீச்சை வெளிப்படுத்தி ஆர்சிபி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். தான் வீசிய முதல் ஓவரிலேயே 141 கி.மீ வேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் பரத் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஆர்சிபி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார்.

Tags : Williamson , Williamson
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்