கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு!: எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகா நீர்ப்பாசன துறையில் பணியாற்றும் ஒருவர் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்தும், முறைகேடான வழிகளிலும் சொத்துக்களை குவித்த ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் உமேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது.

எடியூரப்பா பதவிக்காலத்தில் நீர்பாசனத்துறை திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அதன் மூலம் உமேஷ் சொத்துக்களை குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் மகன்களுக்கும் நெருக்கமானவரான உமேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் பல நூறு கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எடியூரப்பா பதவி விலகிய பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் அவரது குடும்பத்திற்கு முக்கிய பதவி அளிக்க மறுத்து வரும் பாஜக, இளையமகன் விஜேந்திராவுக்கு அமைச்சர் பதவி தரவும் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் எடியூரப்பா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.

Related Stories: