×

நவம்பர் முதல் தேதி பள்ளிகள் திறப்பு, 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோரும் இருக்கலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மருங்காபுரி மற்றும் வையம்பட்டி ஒன்றியத்தில் நேற்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் முதல் முறையாக 1ம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முக கவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம்.

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வந்தால், அப்போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். உலக சுகாதார அமைப்பு இந்த தொற்றை விட மிகப்பெரிய தொற்று குழந்தைகளின் மனநிலைதான் என கூறியுள்ளது. அதனை மையப்படுத்தி பள்ளிகள் செயல்படும் என்றார்.

வையம்பட்டி ஒன்றியத்தில் இன்று நடந்த பிரசாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது: இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்களும் பாராட்டும் வகையில் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். கடந்த முறை எதிர்கட்சியாக இருக்கும் போது கொரோனா காலத்தில் வாழ்விழந்து நிற்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அன்றைய அரசு ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது என்று கூறி ரூ.1000 வழங்கியது. அப்போதே அதிமுக அரசு கஜானா காலி என்று ஒப்புக்கொண்டு விட்டது. இப்ேபாது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியதோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Makesh , Anbil Mahesh
× RELATED நாகர்கோவில் மாநகர பகுதியில் மழை நீர்...