பாஜக தேசிய நிர்வாக குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, எம்.பி வருண் காந்தி நீக்கம்

டெல்லி: பாஜக தேசிய நிர்வாக குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் அவரது மகனும், எம்.பி.யுமான வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் இருவரின் பெயரும் இல்லை என தெரிகிறது. லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து வருண் காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, நிர்வாகக் குழுவில் இருந்து வருண் காந்தி நீக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் மிஸ்ரா, துணை முதல்வருக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 7-ம் தேதி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>