காஞ்சாம்புறம் சந்தையில் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்: மீட்க வந்த பேரூராட்சி அலுவலரும் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

நித்திரவிளை: ஏழுதேசம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் காஞ்சாம்புறம் சந்தை உள்ளது. இந்த சந்தையின் ஒரு பகுதியை பேரூராட்சி நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றியுள்ளது, குப்பைகளை கிடங்கில் சேமிக்காமல் திறந்தவெளி  சந்தையில் கொட்டி    வைத்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு வேளையில் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த பகுதியில்  பேரூராட்சி நிர்வாகத்தினர் தனியார்  வாகனங்களில் கழிவு மண்ணை கொட்டி விட்டு சென்றுவிட்டனர். இதனால் உடையான்தறை பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் பாதையை அடைத்துக் கொட்டப்பட்ட மண்ணை அகற்ற  பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் செய்த பிறகும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மாலை ஒரு தனியார் மினி லோடு ஆட்டோவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு மண்ணை கொட்ட வந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் வாகனத்தை சிறைப்பிடித்து மண்ணை கொட்ட விடாமல் தடுத்தனர்.   இதையறிந்த  பேரூராட்சி செயல் அலுவலர் ஜாண்சன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கழிவு மண்ணை சந்தை வளாகத்தில்  கொட்ட வந்தனர். இதில்   ஆவேசமடைந்த பொதுமக்கள் செயல்  அலுவரையும் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து நித்திரவிளை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி   செயல் அலுவலரையும், வாகனத்தையும் மீட்டு சென்றனர். செயல் அலுவலர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>