×

கடலாடியில் ராணுவ பயிற்சி பெறும்இளைஞர்களுக்கு கிடைத்தது மைதானம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

சாயல்குடி: கடலாடியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 50 இளைஞர்களுக்கு 10 ராணுவ வீரர்கள் இலவசமாக ராணுவ பயிற்சி அளித்து வருகின்றனர். இளைஞர்கள் மைதான வசதியின்றி சாலையோரம் விபத்து அச்சத்தில் பயிற்சி பெற்று வருவதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அரசு கல்லூரி மைதானம் சீரமைத்து வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் ராணுவவீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் இணைந்து சேது சீமை பட்டாளம் மற்றும் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடலாடியை தலைமையிடமாக கொண்டு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 50 இளைஞர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உடற்பயிற்சி, வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் ராணுவவீரர்கள், விடுமுறையில் வரும் வீரர்கள் ஒருங்கிணைந்து தன்னார்வத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர். ஆனால் கடலாடியில் மைதானம் இல்லாததால், இளைஞர்கள் சாலையோரங்களில் பயிற்சி பெற்று வந்தனர். இதனால் விபத்து அபாயம் நிலவியது. எனவே நிரந்தரமாக உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவபுரத்திலுள்ள கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தை பயன்படுத்திக்கொள்ள கல்லூரி முதல்வர் விமலா அனுமதியளித்தார். இதனை தொடர்ந்து சீமை கருவேலமரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்த மைதானத்தை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் காளிதாஸ் சார்பாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சீரமைக்கப்பட்டு மைதானம் தயார்படுத்தப்பட்டது. இதனால் பயிற்சி பெறும் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்த மாதம் புதுக்கோட்டையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு பெறுவோம் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : Kataladi ,District Administration , Military trainees in Kataladi got ground: District administration action
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...