கடமலை-மயிலை ஒன்றியத்தில் மழையால் செங்கல் சூளைகள் மூடல்: உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலை

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் தொடர்மழையால் செங்கல் சூளை பணிகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, தங்கம்மாள்புரம், கண்டமனூர், குமணந்தொழு, மூலகடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், செங்கல் சூளை பணிகள் அடியோடு பாதிப்படைந்துள்ளது. மேலும், உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், செங்கல் சூளை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், செங்கல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், ‘மழையால் சில தினங்களாக தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக செங்கல்சூளை தொழில் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories: