×

போதிய இடவசதி இல்லை ஆத்தூர் தீயணைப்பு நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?

சின்னாளபட்டி: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தீயணைப்பு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாததால் தீயணைப்பு வாகனம் திறந்தவெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இடவசதி இல்லாததுடன் கழிவறை, குளியலறை வசதி சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களின் போது தீயணைப்பு நிலையம் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுவதுடன், தீயணைப்பு வீரர்களின் உடைமைகளையும் மழையில் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில், தீயணைப்பு நிலையத்திற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை எழுந்தது. ஆனால் செய்து தரப்படவில்லை. தற்போது ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், தாலுகா அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் பொதுமக்கள் தங்களது டூவீலர்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. அவசர காலங்களில் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் எளிதில் வெளியேற முடியாத நிலை உள்ளது.

எனவே தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் நலன் கருதி ஆத்தூர் கோழிப்பண்ணை பிரிவு அல்லது புதுகோடாங்கிபட்டி பிரிவு பகுதியில் புதிய தீயணைப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘தண்ணீர் நிரப்பியுள்ள தீயணைப்பு வாகனத்தை மேற்கூரையுடன் கூடிய செட்டில் தான் நிறுத்த வேண்டும் மேலும் இங்கு கவாத்து மைதானமும் இல்லாததால், தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சியளிக்க முடியவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்.

Tags : Attur fire station , Not enough accommodation Will the Attur fire station be relocated?
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...