×

கொல்லிமலையில் கேட்பாரற்று கிடந்த 26 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்: இதுவரை 80 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், கேட்பாரற்று கிடந்த 26 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், அனுமதியின்றி கள்ளத் துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வாழவந்திநாடு போலீசார், வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, துப்பாக்கியுடன் வருபவர்களை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி புலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் உத்தரவின்பேரில், போலீசார் செம்மேடு பகுதியில் உள்ள வல்வில் ஓரி அரங்கத்தில் தாசில்தார் தலைமையில் 2 முறை கொல்லிமலை 14 நாடு ஊராட்சியில் உள்ள ஊர் முக்கிய பிரமுகர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஆங்காங்கே முட்புதரில் துப்பாக்கிகளை வீசி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று, தின்னனூர் நாடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் 26 கள்ளத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடந்தது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், எஸ்ஜ கங்காதரன் மற்றும் போலீசார் 26 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு மட்டும் 80 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆயுதப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 100 ரவுடிகள் கைது
எஸ்பி பேட்டி: நாமக்கல் மாவட்ட எஸ்பி நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த கடந்த வாரம் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 அரிவாள், கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 110 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலையில் மட்டும் சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்த 80 நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ், டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் சதீஸ், எஸ்ஐகள் கங்காதரன், செல்வராஜ் ஆகியோர் இரண்டு வாரமாக தீவிரமாக சோதனை செய்து கொல்லிமலையில் இருந்து 80 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சோதனை நடைபெறும். அங்குள்ள மலைகிராமங்களில் 500 முதல் 1000 துப்பாக்கிகள் வரை இருக்கிறது. அனைத்து துப்பாக்கிகளையும் அவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்க முன்வரவேண்டும். கள்ளத்துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது 94981 01020 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.

Tags : Kollimalai , 26 counterfeit firearms seized in Kollimalai: 80 firearms handed over so far
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...