தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற போது தொழில்நுட்ப கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 9 தோணி தொழிலாளிகள் : கனிமொழி எம்பி நடவடிக்கையால் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி:  மாலத்தீவு அருகே கடலில் ஆபத்தில் சிக்கிய தோணியில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த  9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து கடந்த 2ம் தேதி அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா என்ற தோணியில்  காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 9 தொழிலாளர்கள்  மாலத்தீவை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு மூழ்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உடனடியாக அப்படகில் இருந்த அவசர நிலை தொலைத்தொடர்பு சாதனம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல்  தெரிவித்து உள்ளனர். இதையடுத்து படகின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்த 9 பேரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கனிமொழி எம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்த அவர் உடனடியாக மத்திய அமைச்சகத்தை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. மாலத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று தூத்துக்குடி தோணி தொழிலாளர்கள்  சென்ற படகிற்கு சற்று தூரத்தில் இருப்பதைக் கண்டறிந்து அக்கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது 9 தொழிலாளர்களும் காப்பாற்றப்பட்டு மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தோணியின் மாஸ்டர் ஆரோக்கியசாமி எட்வர்ட், தொழிலாளர்கள் மரிய அந்தோணி சந்தோஷ், சிரன்  ஆரோக்கியசாமி, சீலன் வில்ஸ்டன், மில்டன் எட்வர்ட், நாராயணன் உன்னி கிறிஸ்டோபர், அடைக்கலம் லூர்து மரியான், வசந்த் எஸ்டோவ், தொம்மைஞானம் ஆகிய 9 பேர் மீட்கப்பட்டவர்களாவர். விரைவில் இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 9 தொழிலாளர்களை காப்பாற்ற முயற்சியெடுத்த கனிமொழி எம்பிக்கு அவர்களது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களை கனிமொழி எம்பி வீடியோ கான்பரன்சில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories: