சென்னை,சேலம் உட்பட நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : தமிழகம் உட்பட நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். கொரோனா பரவல் பேரிடர் தடுப்பு நடவடிக்கை இரண்டாம் அலையின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், திரவ நிலை ஆக்சிஜன் உருளை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவ ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் உருளை அமைக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது.அது போல், சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பி.எம். கேர்ஸ் திட்டத்தின் ரூ. 95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது. அதே போல் சென்னை ராஜீவ் காந்தி, தேனி, பெரியகுளம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 6 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார். பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆக்சிஜன் உற்பத்தி நிலைய தொடக்க விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.   

Related Stories: