×

மும்பை சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவர் கைது..!!

மும்பை: மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவரை மராட்டிய காவல்துறை கைது செய்துள்ளது. சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தை மராட்டிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். போதை விருந்தில் பங்கேற்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஆர்யன்கான் அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோரிடம் இருந்து 13 கிராம் கோகைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து 3 பேரையும் காவலில் எடுத்து போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆர்யன் உள்ளிட்ட 3 பேரின் விசாரணை காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள். இந்நிலையில், சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், பாந்த்ரா பகுதியில் பதுங்கி இருந்த வெளிநாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து மெப்கிட்ரொன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக சொகுசு கப்பலில் போதை விருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Mumbai , Luxury ship, drug party, foreigner, arrest
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!