ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஓலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்தனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஜி-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.2 கோடி-க்கான காசோலையை முதல்வர் அளித்தார்.

அதனையடுத்து 2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (திமிஞிணி) மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப் பதக்கம்  வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும்

ஆர். வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் வீதம், மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணன் அவர்களுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா. அதிபன்,  ஆர். பிரக்ஞானந்தா, ஆர். வைஷாலி மற்றும் பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணன் அவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ. ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் அளிக்கப்பட்டது.

கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பா. அதிபன் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி. வர்ஷினி மற்றும் பி.வி. நந்திதா ஆகியோருக்கு தலா 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் அளிக்கப்பட்டது.  

மேலும் 2020-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல் மற்றும் மு. பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் / உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதனையடுத்து, ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் முதலமைச்சரிடம் ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது முதலமைச்சர் ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று மாரியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் செஸ் விளையாட்டில் நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள் என விஸ்வநாத ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>