தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களுக்கு தலைமையிடம் ஒதுக்கீடு

சென்னை: சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட 2 புதிய போலீஸ் கமிஷனரகங்களுக்கான தலைமையிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனரகத்தை 3ஆக பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில், சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி ஆகிய போலீஸ் கமிஷனரகங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை போலீஸ் கமிஷனராக தற்போதைய கமிஷனர் சங்கர் ஜூவால் தொடர்ந்து செயல்படுவார் என்று உத்தரவிடப்பட்டது. அதேநேரத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி ரவி, ஆவடி போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான அலுவலகங்கள் எங்கே அமைப்பது, அதிகாரிகள் நியமிப்பது, எல்லைகளை வரையறுப்பது ஆகியவை குறித்த ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சின்னமலையில், தற்போது தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள அலுவலகத்தில் தாம்பரம் கமிஷனர் அலுவலகமும், ஆவடி கமிஷனரகம், அம்பத்தூர் இணை கமிஷனர் அலுவலக வளாகத்திலும் இயங்கும். புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ஆணையரங்களுக்கு தலா ஒரு உளவுத்துறை உதவி கமிஷனர், ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள், 10 போலீசாரை நியமிப்பது அதோடு 6 நிர்வாகப் பிரிவு ஊழியர்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நியமனத்துக்குப் பிறகு, அரசிடம் புதிய பணியிடங்களை உருவாக்கி அவற்றுக்கான அரசாணைகளை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், வருகிற 7ம் தேதிக்குள் 3 கமிஷனரங்களுக்கும் எல்லைகளை பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

More
>