தமிழகம் முழுவதும் வருகிற 17ம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்: தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டை வருகிற 17ம் தேதி தமிழகம் முழுவதும் கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களை இபிஎஸ், ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆர் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக கட்சி, 49 ஆண்டுகளை கடந்து 17-10-2021 (ஞாயிறு) அன்று பொன்விழா காண இருக்கிறது. இது அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.  

பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்களின் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அதிமுக கட்சியின் தொடக்க நாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுகவின் பொன்விழா தொடக்க நாள் நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே பற்கேற்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பங்குபெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>