காஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன்?..இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் பேட்டி

சென்னை:இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்தும், மாற்று எரிசக்தி குறித்தும் நேற்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  உலக நாடுகள் வானிலை மாற்றம் குறித்து சில இலக்குகளை வைத்து முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால், பல நாடுகள் பின்வாங்கிவிட்டன. அதில் இந்தியாவும் மாசு இல்லாத நிலையை உருவாக்குவதை இலக்காக கொண்டு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவற்றில் நாம் முன்னேற்றம் கண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் மாசு இல்லாத நிலையை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தை கொண்டு மாற்று ஆற்றல் சக்தியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

குறிப்பாக நானோ, செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். இந்த ஆராய்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வரும் காலங்களில் ரூ.3200 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கார்பன் மாசு அத்தியாவசிய பயன்பாடுகளில் இன்றியமையாததாக இருக்கிறது. விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் அதன் பயன்பாட்டை குறைப்பது சிரமமாக இருக்கிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் எல்லா இடங்களிலும் ஒருங்கிணைந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம். மாற்று ஆற்றல் சக்தியை பயன்படுத்தும் முயற்சியாக தற்போது பெட்ரோலுடன் எத்தனால் தேசிய அளவில் 8.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் எத்தனால் 20 சதவீதம் வரை பயன்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயோ மாசிலிருந்து 2ஜி எத்தனால், ஆட்டோ மொபைல்களுக்கான பேட்டரியில் தொழில்நுட்பம், கரியமிலவாயுவில் இருந்து பயோ-டீசல் உற்பத்தி, செறிவூட்டப்பட்ட சூரிய மின்சக்தி மற்றும் ஆற்றல் சேகரிப்பு கருவிகள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளுக்கான வளர்ச்சிப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டெல்லியில் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய 50 மாநகர பஸ்களில், இயற்கை எரிவாயுவுடன் ஹைட்ரஜன் கலந்து சாலையில் இயக்கப்பட்டது. இதன் ஆராய்ச்சி முடிவு சிறப்பாக இருந்தது.

அதுபற்றிய அறிக்கை காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் வழக்கில் குறிப்பிடத்தக்க ஆவணங்களாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் சிஎன்ஜி வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் நிறுவ உள்ளது. இதன் மூலம் 5000 தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட சிஎன்ஜி வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளது. எனவே அவை உற்பத்தி செய்வது விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்த உடன் சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.

இந்தியாவில் காஸ் சிலிண்டரை 90 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். 90 சதவீதம் மக்கள் பயன்படுத்தும் எரிவாயுவில் 50 சதவீதம் அளவு தான் இந்தியா உற்பத்தி செய்கிறது. மற்ற 50 சதவீதத்தை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றத்தை கொண்டு வரும்போதெல்லாம் இங்கு சிலிண்டர் விலை உயருகிறது. முன்பு அரசு மானியம் வழங்கி வந்தது. அதனால் அந்த விலை உயர்வு தெரியாமல் இருந்தது. தற்போது அரசு கொள்கை முடிவு எடுத்து மானியத்தை நிறுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் காஸ்  சிலிண்டரை 90 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். 90% மக்கள் பயன்படுத்தும் எரிவாயுவில் 50 சதவீதம் அளவு தான் இந்தியா உற்பத்தி செய்கிறது

Related Stories:

More
>