×

தேனி அதிமுக பிரமுகர் 100 ஏக்கர் நில மோசடி விவகாரம் 2 சர்வேயர் சஸ்பெண்ட் தாசில்தார் தலைமறைவு: நவீன தொழில்நுட்பம் மூலம் கைவரிசை; அடுத்தடுத்த விசாரணையில் பகீர் தகவல்

தேனி: தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், சர்வேயர்கள் ஆதரவோடு பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னப்பிரகாஷ்  மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களில் 27 பட்டாக்களாக மாறுதல் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இவ்விவகாரத்தில் தேனி கலெக்டர் முரளிதரன், மாவட்ட பதிவாளருடன் ஆலோசனை நடத்தி, மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியுள்ளார். மேலும், இதில் தொடர்புடைய பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்தினமாலா, ஆண்டிபட்டி துணை தாசில்தார் சஞ்சீவ்காந்தி, போடி துணைத் தாசில்தார் மோகன்ராம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், இதேபோல பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் அரசு நிலம் 56 ஏக்கர் மோசடியாக, 42 பேருக்கு பட்டா பெயர் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் ஆவணம் நேற்று முன்தினம் கலெக்டர் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த ஆவணம் மீது கலெக்டர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, அரசு நிலங்களில் இருந்து பல லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில், கனிமவளத்துறை ரூ.14 லட்சம் அபராதம் விதித்த நிலையில், இதில் ரூ.4 லட்சம் மட்டுமே அபராதத் தொகையை அன்னப்பிரகாஷ் செலுத்தியுள்ளதும் அதிகாரிகள் மீது சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலமோசடி தொடர்பாக சர்வேயர்கள் சக்திவேல், பிச்சைமணியை, நில அளவீட்டுத் துறை உதவி இயக்குநர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் முரளிதரன் கூறுகையில், ‘‘ கம்ப்யூட்டர் மூலமாக நவீன தொழில்நுட்ப அறிவுடன் மோசடி நடந்துள்ளது. எவ்வளவு கனிம வளம் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து செய்கைகோள் வரைபடம் மூலமாக ஆய்வு செய்து, திருடப்பட்ட மண் குறித்து மதிப்பீடு செய்து மண்ணை தோண்டி எடுத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இருக்கும்’’, என்றார். இந்த மோசடி காலத்தில் பணிபுரிந்த கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், சர்வேயர்கள், விஏஓக்கள் வரை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. விசாரணையின் முடிவில் பல அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags : Theni ,AIADMK , Theni AIADMK leader 100 acres land scam 2 Surveyor Suspended Tasildar Disappearance: Hand in hand with modern technology; Pakir information at the next hearing
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!