குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்

உடன்குடி: பிரசித்திப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி தசரா திருவிழா, நேற்று காலை 9.41 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டத்திற்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலைச் சுற்றி வந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர், குங்குமம், விபூதி, சந்தனம், தேன் மற்றும் 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. 1ம் நாள் திருவிழாவான நேற்றிரவு 8 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதியுலா நடந்தது.

5 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக அதிகளவில் பக்தர்கள் கூடி தங்கள் ஊர்களில் அமைக்கப்படும் தசரா பறைகளுக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்றனர். நேற்று பக்தர்கள் ஊர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அக்.15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 10ம் நாள் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், கோயில் வளாகத்தில் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து 11ம் திருநாளன்று கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளல், 12ம் திருநாள் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories:

More
>