×

முதன்மை உணவாக மனிதன் இல்லை டி23 புலியை ஆட்கொல்லி புலியாக கருத முடியாது: முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் பேட்டி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் டி23 புலியை பிடிக்கும் பணி 12வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அளித்த பேட்டி: டி23 புலி, மனிதர்களை கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி  டி23 புலியை பிடிக்க முயன்று வருகிறோம். புலியின் பாதுகாப்பு, வனத்துறையினரின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் வைத்து பணிகள் நடைபெறுகிறது.

சிங்காரா வனப்பகுதியில் இந்த புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வயதான காரணத்தால் அதற்கு வேட்டையாட முடியாத நிலை உள்ளது. சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்தும், மன்றாடியார் வனப் பகுதியில் ரோந்து பணிகள் மூலமும், தெர்மல் டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மை உணவு மனிதர்களாக இருந்தால் மட்டுமே அதனை ஆட்கொல்லி புலியாக கருத முடியும். இந்தப்புலி இதுவரை மாடுகளையும், அதனை மேய்ப்பவர்களையுமே தாக்கி வருகிறது.

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில் மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 4 பேர் இறப்பில் முதல் இரு மரணம் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை. இதனை டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் பிரச்னைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும். ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்னை இருக்காது. இதற்காக, டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்கிறோம். காடுகளில் வாழும் புலி 14 வருடம் வரை இருக்கும். வன  உயிரின பூங்காகளில் அடைத்து அவற்றை பாதுகாக்கும் போது கூடுதலாக 10 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : No man as primary food T23 tiger cannot be considered a killer tiger: Interview with Chief Wildlife Conservator
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை