×

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புனித தோமையார் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் அடங்கிய மாவட்டக் கவுன்சிலர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர் கள் பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

நேற்று மகாளய அமாவாசை என்பதால் பெரும்பாலானோர் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க சென்று விட்டனர். இதனால் பல வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. 12 மணி வரை 20 சதவீத வாக்குப்பதிவே நடைபெற்றது. பகல் 12 மணிக்குப் பிறகு பலரும் குடும்பத்துடன் வாக்களிக்க வந்தனர். இதனால் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பல வாக்குசாவடிகளில் திருவிழாக் கூட்டம் போல் வாக்காளர்கள் காணப்பட்டனர்.
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளம் ஊராட்சியில் உள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், கிராம மக்கள் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், மீனவர் குடியிருப்பு பகுதியில் மற்றொரு வாக்குச்சாவடியும் அமைக்கப் பட்டிருந்தது. ஆனால், கிராம மக்களுக்கு மீனவர் குடியிருப்பு வாக்குச் சாவடியிலும், மீனவ மக்களுக்கு கிராம வாக்குச்சாவடியிலும் வாக்குகள் இருந்தன. இந்த குழப்பத்தால் இரு தரப்புமே வாக்களிக்க வர முடியாது என்று கூறி புறக்கணித்தனர். இதையடுத்து திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ராகவன், வட்டாட்சியர் ராஜன், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அங்கு வந்து இரு தரப்பு மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அடுத்த தேர்தலில் இந்த தவறு சரி செய்யப்படும் என்றும் ஆகவே, இந்த ஒரு முறை வாக்களிக்க வருமாறும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் பதினோரு மணிக்கு அதிகாரிகள் உறுதிமொழியை எழுத்து மூலமாக அளித்தால் வாக்களிப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய வடநெம்மேலி, கோவளம் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.  

 திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 49 ஊராட்சிகள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நேற்று இரவு 7 மணி வரை சராசரியாக 82 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நேற்று காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய 3 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அசம்பாவிதம் எதுவும் இன்றி முதல்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இதற்காக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குப்பதிவு மையங்கள், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 232 வாக்குப்பதிவு மையங்கள், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 252 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 680 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதற்கட்ட தேர்தலில் 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 நபர்களும், 61 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 நபர்களும், 174 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 591 நபர்களும், 1200 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3211 நபர்களும் போட்டியிட்டனர். இத்தேர்தல் பணிக்காக 5658 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

மேலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறை சார்பில் 3 டிஎஸ்பிகள், 4 ஏஎஸ்பிகள், 14 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1911 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். 2 மணி நேரம் பாதிப்பு: உள்ளாவூர் வாக்குச்சாவடியில் போட்டியிட்ட வேட்பாளரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால் வாக்குபதிவு தொடங்க கூடாது என்று வேட்பாளர் லட்சுமி கூறினார். அதற்கு அதிகாரிகள் போஸ்டரில்தான் மாற்றப்பட்டுள்ளது ஆவணங்களில் சரியாக உள்ளது என்று கூறினர். இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags : Chengalpattu ,Kanchipuram , In Chengalpattu and Kanchipuram, people voted enthusiastically in the local elections
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...