அமித்ஷா, அஜித் தோவலை தொடர்ந்து ஓரிரு நாட்களில் மோடியை சந்திக்கிறார் அமரீந்தர் சிங்: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து விலகிய காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங், அடுத்த ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும்,  நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமரீந்தரின் கடும் எதிர்ப்பையும் மீறி, இம்மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. இதைத் தொடர்ந்து, இம்மாநில காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் 50 பேர், அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும்படி, கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதனால், கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி, முதல்வர் பதவியை அமரீந்தர் ராஜினாமா செய்தார். அதேபோல், சித்துவும் தனது மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பாஜ மூத்த  தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சமீபத்தில் டெல்லிக்கு சென்று அமரீந்தர் சந்தித்துப் பேசினார். இதனால், பாஜ.வில் சேர இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அமித்ஷாவை சந்தித்த மறுநாள்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் அமரீந்தர் சந்தித்து பேசினார். இதனால், அமரீந்தரின் திட்டம் என்னவாக இருக்கும் என குழப்பம் ஏற்பட்டது. தோவலை சந்தித்த பிறகு அமரீந்தர்  அளித்த பேட்டியில், ‘காங்கிரசில் இருந்து விலகப் போகிறேன்.

ஆனால், வேறு கட்சியில் சேர மாட்டேன்,’ என அறிவித்தார். இதனால், பஞ்சாப்பில் அவர் புதிய கட்சியை தொடங்கி, அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆதரவுடன் போட்டியிடக் கூடும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு சில நாட்களில் பிரதமர் மோடியை அமரீந்தர் சிங் சந்தித்து பேச இருப்பதாக நேற்று  தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பஞ்சாப்பில் மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* எதிர்கால திட்டம் தெரியும்?

மோடியை அமரீந்தர் சிங் சந்தித்து பேசப் போவதாக வெளியாகி இருக்கும் தகவலை, அமரீந்தரோ அல்லது பாஜ வட்டாரங்களோ மறுக்கவில்லை. இந்த சந்திப்புக்குப்  பிறகு, அமரீந்தரின்  எதிர்கால அரசியல் திட்டம் பற்றிய தெளிவான அறிவிப்பு  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: