சர்வதேச ஹாக்கி ஸ்டார் அனைத்து விருதுகளையும் அள்ளிய இந்தியா

லோசேன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வழங்கும் இந்த ஆண்டுக்கான ‘ஹாக்கி ஸ்டார்’ விருதுகள் அனைத்துக்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்று சாதனை படைத்தது. பதக்கம் வெல்லா விட்டாலும் இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. அதனால் இந்திய அணிகள் உலக ஹாக்கி ரசிகர்களை   தன்பக்கம் இழத்தன. அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் இந்தியா இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு(எப்ஐஎச்) வழங்கும் இந்த ஆண்டுக்கான ‘ஹாக்கி ஸ்டார்’ விருதுகள் அனைத்தையும் இந்தியாவே பெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஹாக்கி வீராங்கனைக்கான விருது இந்தியாவின் குர்ஜித் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஹாக்கி வீரருக்கான விருதுக்கும்  இந்தியாவின்  ஹர்மன்பிரீத் சிங் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சிறந்த கோல் கீப்பர்களாக மகளிர் பிரிவில் சவீதா, ஆடவர் பிரிவில் ஸ்ரீஜேஷ் ஆகியோரும், சிறந்த  வளரிளம் ஆட்டக்காரர்களாக மகளிர் பிரிவில் ஷர்மிளா தேவி, ஆடவர் பிரிவில்  விவேக் பிரசாத் ஆகியோர் என இந்தியர்களே தேர்வாகி உள்ளனர். சிறந்த பயிற்சியாளர்களாக இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்டு மரிஜ்னே(நெதர்லாந்து), இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட்(ஆஸ்திரலேியா) ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இப்படி ஹாக்கி ஸ்டாருக்கான நபர்களை தேர்வு செய்ய 79 நாடுகளை சேர்ந்த கேப்டன்கள், பயிற்சியாளர்கள்  வாக்களித்தனர். கூடவே ஹாக்கி ஆட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்களும் வாக்களித்துள்ளனர். ரசிகர்கள் பிரிவில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 3லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அனைத்து பிரிவுகளிலும் அதிக புள்ளிகள் பெற்றவர்களே விருதுகளுக்காக தேர்வாகி உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் ஆடவர் பிரிவில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இந்தியா,  மகளிர் பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டீனா, பிரிட்டன் ஆகிய அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.

Related Stories: