ஆஸி-இந்திய மகளிர் மோதல் இன்று முதல் டி20 ஆட்டம்

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா, இந்திய மகளிர் அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் இன்று குயின்ஸ்லாந்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களை கொண்ட தொடரிலும், ஒரு பகல்/இரவு டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடி வருகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதே நேரத்தில் டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் டி20 தொடர் இன்று தொடங்குகிறது. டி20 ஆட்டங்கள் அனைத்தும் கொரோனா பீதி காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா அரங்கில் மட்டும் நடக்கும்.

காயம் காரணமாக ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடாத டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இப்போது  டி20 தொடரில் களம் காண்கிறார். இந்திய அணியில் அறிமுகமாக உள்ள புதுமுகங்கள் அணிக்கு வலு சேர்ப்பார்கள்.

கூடவே  மகளிர் டெஸ்ட் 5 நாட்கள் நடைபெறும் ஆட்டமாக இருந்திருந்தால், மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்தியா எளிதில் வென்று இருக்கும். கூடவே ஒருநாள் ஆட்டங்களையும் நூலிழையில்தான் இந்தியா இழந்தது. அதனால் டி20 ஆட்டத்திலும் ஆஸிக்கு இந்திய கடும் சவாலாக இருக்கக் கூடும். ‘அந்த சவாலை எதிர்பார்த்தாகவும், அது தங்கள் வீராங்கனைகளுக்கு நல்ல பயிற்சியாக அமைந்ததாகவும்’ ஆஸி கேப்டன் மேக் லானிங் கூறியுள்ளார்.

கூடவே  ‘இந்தியாவை எளிதில் வெல்லும் வீராங்கனைகள் எங்களிடம் உள்ளனர்’ என்றும் மேக் தெரிவித்துள்ளார். முக்கிய வேகம் டெய்லா மீண்டும் அணியில் இணைவதும், உள்ளூரில் விளையாடுவதும் ஆஸி அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். அதே நேரத்தில் ‘3ஆட்டங்களையும் வெல்லும் சிறந்த வாய்ப்பு எங்களுக்கு உள்ளது’ என்று இந்திய கேப்டன் ஹர்மனும் சொல்லியுள்ளார். ஆஸியில் நடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இரு அணிகளும் இன்று நடைபெறும் முதல் டி20 ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 டி20 ஆட்டங்களில் ஆஸி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

Related Stories:

More
>