×

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கான இணையாக தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு போனஸ் வழங்குவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான தொகை தீபாவளி போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘குரூப் 3 மற்றும் 4 பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான தொகை, உற்பத்தி திறன் சார்ந்த போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள்,’’ என்றார். அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 78 நாள் ஊதியம் கணக்கிடுகையில், தகுதி வாய்ந்த ஊழியர்கள் ரூ.17,915 வரை போனசாக பெறுவார்கள். கடந்த 2010-11ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரையிலும் 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் ரூ.1984.73 கோடி செலவாகும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த போனஸ் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பணியாளர்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 7 ஜவுளிப் பூங்கா அமைக்க அனுமதி
அமைச்சரவையில், ஜவுளித் துறையை ஊக்குவிக்க நாடு முழுவதும் பிஎம்-மித்ரா எனப்படும் 7 ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மற்றும் ஆடைப் பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டிற்கு ரூ.4,445 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பிஎம் மித்ரா திட்டத்தின் மூலம் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த பூங்காவில் ஆடை உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து செயல்பாடுகளும் ஒரே இடத்தில் நடப்பதால், போக்குவரத்து செலவு குறையும். உற்பத்தி அதிகரிக்கும்’’ என்றார். 1000 ஏக்கர் நிலத்துடன் ஜவுளித் துறைக்கு உகந்த சூழலுடன் உள்ள மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைய ஒன்றிய அரசு வரவேற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, மத்தியபிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்கள் ஜவுளிப் பூங்கா அமைக்க ஆர்வம் தெரிவித்துள்ளன.

Tags : Diwali ,Union Cabinet , 78-day Diwali bonus for railway employees: Union Cabinet approves
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...