×

வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பங்களுக்கு லக்கிம்பூரில் ராகுல், பிரியங்கா ஆறுதல்: கடும் எதிர்ப்பால் அரசியல் கட்சிகளுக்கு யோகி அனுமதி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பாஜவினர் சென்ற வாகனங்கள், விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசியது. இதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பாஜ.வினர், ஒரு பத்திரிகையாளர் என 5 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய கார், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற உபி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 4ம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார். அவர் சிதாபூரில் பிஏசி அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று லக்கிம்பூருக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். அவருடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்பட சிலர் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல், லக்னோ சென்றடைந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் கடும் நெருக்கடி அடைந்துள்ள யோகி அரசு, ராகுல், பிரியங்கா உட்பட காங்கிரஸ் குழுவினர் 5 பேர் லக்கிம்பூருக்கு செல்ல அனுமதி வழங்கியது.  

லக்னோ விமான நிலையத்தில் ராகுல் இறங்கியதும், அங்கிருந்த உபி போலீசார், போலீஸ் வாகனம் மூலமாக லக்கிம்பூர் செல்ல வேண்டுமென கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராகுல் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். அதன்பின் ராகுல் தனது சொந்த வாகனத்தில் செல்ல போலீசார் அனுமதித்தனர். அங்கிருந்து சிதாபூர் சென்ற ராகுல், பிஏசி விருந்தினர் மாளிகைக்கு சென்று பிரியங்காவை சந்தித்தார். லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 3 நாட்களாக தடுப்பு காவலில் இருந்து பிரியங்கா நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பிரியங்காவுக்கு, அங்கு கூடியிருந்த காங்கிரசார் வாழ்த்து கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, ராகுல், பிரியங்கா உட்பட காங்கிரஸ் குழுவினர் லக்கிம்பூர் கேர் மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டனர். முதலில் சிதாபூரில் இருந்து 100 கிமீ தொலைவில் நிகாஷன் பகுதிக்கு சென்ற ராகுல், பிரியங்கா குழுவினர், வன்முறையில் பலியான பத்திரிகையாளரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அதைத் தொடர்ந்து லக்கிம்பூருக்கு சென்று பலியான 4 விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓயமாட்டோம் என ராகுல் உறுதி கூறி உள்ளார். இதனால், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

* உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு
லக்கிம்பூர் விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இது, இன்று உடனடியாக விசாரணைக்கு வருகிறது.

* ராபர்ட் வதேரா தடுத்து நிறுத்தம்
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தனது முகநூல் பதிவில், `பிரியங்கா குற்றவியல் தண்டனை சட்டம் 151ன் கீழ் கைது செய்யபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதித்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது கைது செய்யப்பட்டு சீதாபூர் சிறையில் இருக்கும் அவரை பார்த்து உடல் நலம் விசாரிக்க லக்னோ சென்ற என்னை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் கைது செய்யப்பட்டதால், எங்களின் பிள்ளைகள் கவலையில் உள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.

* பஞ்சாப், சட்டீஸ்கர்  ரூ.1 கோடி நிதியுதவி
சட்டீஸ்கர், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சரண்ஜித் சிங் சன்னியுடன் ராகுல் காந்தி நேற்று லக்கிம்பூர் சென்றார். அப்போது, லக்கிம்பூரில் கொல்லப்பட்ட 4 விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தங்கள் மாநில அரசின் சார்பில் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக 2 முதல்வர்களும் அறிவித்தனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் கூறுகையில், ‘லக்கிம்பூர் வன்முறையை பார்க்கும் போது 1919ல் ஜாலியன்வாலாபாக் கலவரம் தான் நினைவுக்கு வருகிறது. உத்தரபிரதேச அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது. பஞ்சாப் அரசு சார்பில் வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்’. என்றார். இதேபோல், பூபேஷ் பாகலும் நிதியுதவி அறிவித்தார்.

* விவசாயி உடல் தகனம்
லக்கிம்பூர் கேரி வன்முறையில் கொல்லப்பட்ட குருவீந்தர் சிங்கின் சடலம், உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்கி 2வது முறையாக நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும், அவர் சுட்டு கொல்லப்படவில்லை என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, அவரது சடலம் நேற்று சொந்த ஊரான மொகாரியா கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

* இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லியில் நேற்று ராகுல் காந்தி அளித்த பேட்டி வருமாறு: லக்கிம்பூர் கேரிக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்கு முயற்சிக்கிறேன். இங்கே ஜனநாயகம் இருந்தது. இப்போது இந்தியாவில் சர்வாதிகாரம் தான் இருக்கிறது. இப்போது விவசாயிகள் அரசினால் தாக்கப்படுகின்றனர். விவசாயிகள் ஜீப் மூலமாக தூக்கி வீசப்படுகின்றனர். அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். பாஜ ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர் இதில் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் உள்ள விவசாயிகள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் தாக்குதல், நிலத்தை கையகப்படுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு மாற்றி அமைத்தது, அடுத்ததாக, மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இன்று திட்டமிட்டு விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு முன்பும் கூட ஹத்ராஸ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். முன்பும் பாஜ எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். உத்தரப்பிரதேசத்தில் புது வகையான அரசியல் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் என்ன விரும்புகிறார்களோ அது பலாத்காரமாக இருந்தாலும், விவசாயிகளை கொலை செய்வதாக இருந்தாலும் சரி செய்யலாம். விவசாயிகளின் சக்தியை அரசு அறிந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

* அமித்ஷாவுடன் சந்திப்பு
லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மகன் காரை ஏற்றி நசுக்கி கொன்றதான குற்றச்சாட்டுக்கு பிறகு வடக்கு பிளாக்கில் உள்ள தனது அலுவலக அறைக்கு சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டிற்கு சென்ற அவர் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள் காரை ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அமித்ஷாவிடம் விளக்கியதாக தெரிய வந்துள்ளது.

* மகாராஷ்டிராவில் 11ல் பந்த்
பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வன்முறைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை விவசாயிகள் நடத்துவார்கள்’’ என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து, வரும் 11ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என்று ஆளும் சிவசேனா கூட்டணி அறிவித்துள்ளது.

Tags : Rahul ,Priyanka ,Lakhimpur ,Yogi , Rahul, Priyanka offer condolences to families of violent farmers in Lakhimpur: Yogi admission to political parties
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!