போலீசை புல்லாங்குழல் ஊத வைத்து ரசித்த விவகாரம் துணை கமிஷனரிடம் இன்று மதுரை கமிஷனர் விசாரணை

மதுரை: ஆயில் மசாஜ் செய்தபடி காவலரை புல்லாங்குழல் ஊத வைத்து ரசித்த விவகாரம் தொடர்பாக, மதுரை ஆயுதப்படை துணை கமிஷனரிடம் மதுரை கமிஷனர் இன்று விசாரணை நடத்துகிறார். மதுரை நகர ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம். இவர், ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசாரை தனது வீட்டிற்கு அழைத்து ஒவ்வொரு வாரமும் ஜட்டி அணிந்த  நிலையில் மசாஜ் செய்து கொள்வதும், மசாஜ் எண்ணெய் உடலில் ஊறும் வரை காவலர்  ஒருவரை, புல்லாங்குழல் மூலம் அவருக்கு பிடித்த பாடலை இசைக்கச் செய்து ரசிப்பதுமாக இருந்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக  வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் போலீசாக சேர்ந்து, ஆயுதப்படையில் இருந்து எஸ்பி வரை பதவி உயர்வு பெற்றவர். இந்த வீடியோ தொடர்பாக ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரத்திற்கும், புல்லாங்குழல் வாசிக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர் மற்றும் அன்றயை தினம் பணியில் இருந்த  மற்ற போலீசாருக்கும் விளக்கம் கேட்டு மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நோட்டீஸ் அனுப்பினார். அதிகாரி ஒருவர் கூறும்போது, ``புகாருக்கு உள்ளானவர் உயரதிகாரி என்பதால், உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து முழு தகவலையும் சேகரித்து தர, தனிக்குழுவும் அமைக்கப்பட்டு, அந்த விசாரணையும் நடந்துவருகிறது. மேலும், அதிகாரி உள்ளிட்ட விளக்கம் கேட்கப்பட்டவர்கள் தரும் விளக்கம் குறித்து கமிஷனரே நாளை (இன்று) நேரில் விசாரணை நடத்தவும் உள்ளார். இந்த விசாரணை முடிந்ததும், அதிகாரி கொடுத்த விளக்கம், கமிஷனர் நடத்திய விசாரணை விபரங்கள்  தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், புகாருக்கு உள்ளான அதிகாரி மீது சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து டிஜிபி அலுவலகம்தான் முடிவு செய்யும்’’ என்றார்.

Related Stories:

More
>