×

நவராத்திரி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் அங்குரார்ப்பணம்: விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

திருமலை: கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் வருடாந்திர பிரமோற்சவம் நிறைவு பெறும் விதமாக நடத்தப்படுகிறது. அதன்படி, 15ம் தேதி புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம் என்பதால் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரமோற்சவம்,  9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி தாயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

நேற்று   ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்காண அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான  விஷ்வசேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள் ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர். அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானியங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது. இந்த அங்குரார்ப்பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்லபட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று தினந்தோறும் நவதானியங்கள் பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட உள்ளது.

பிரமோற்சவத்திற்கான கொடியேற்றம் நாளை மாலை 5.10 முதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற உள்ளது. பிரமோற்சவம் கொடி ஏற்றப்பட்ட முதல் நாளான நாளை இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும்  மலையும்  அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் பிரமோற்சவத்தின் முதல் நாளான நாளை ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

* ஜொலிக்கும் அலங்காரங்கள்
பிரமோற்சவத்திற்காக திருப்பதி, திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களை வரவேற்கும் விதமாக அலங்கார வளைவுகளால் அமைக்கப்பட்டு, திருமலை முழுவதும் கலியுக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

Tags : Tirupati ,Navratri Pramorsavam ,Vishwa Senadhipathi , Launch in Tirupati on the eve of Navratri Pramorsavam: Vishwa Senadhipathi procession
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...