×

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெல் வைத்து பூஜை

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல் வைத்து வைத்து பூஜை செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் அதிகரிக்கும், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பக்தர் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார்.

பக்தர் கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே, அந்த பொருள் மூலவர் சன்னதிக்கு எதிரே கற்தூணில் உள்ள கண்ணாடி பேழையில் (உத்தரவு பெட்டி) வைத்து, பூஜை செய்யப்படும். இதுவரை உத்தரவு பெட்டியில் மண், துப்பாக்கி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் வில் அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாராபுரம் அருகே உள்ள கொங்கூரை சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. சிவராம் கூறுகையில், ‘‘சிவன்மலை ஆண்டவர் கனவில் வந்து கூறியதால் நிறைபடி நெல் கொண்டு வந்து தந்தேன். நெல் விளைச்சல் அதிகரித்து விலை அதிகரிக்கலாம். வேளாண்மை சிறக்கும். இதற்கு முன் என் கவில் வந்த பால், உப்பு, அச்சு வெல்லம், பூமாலை, இரும்பு சங்கலி, மக்காசோளம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Subramanian Swami Temple , sivanmalai
× RELATED மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய...