×

19 மாதங்களுக்கு பிறகு ராமேஸ்வரம்- மதுரை இடையே பயணிகள் ரயில் நாளை முதல் இயக்கம்

மதுரை: ராமேஸ்வரம்-மதுரை இடையே 19 மாதங்களுக்கு பிறகு, நாளை முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்குகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்று முதல் அலை காரணமாக கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் முதல் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த கட்டணத்தில், இயங்கி வந்த, மதுரை-செங்கோட்டை, மதுரை- ராமேஸ்வரம், மதுரை-திண்டுக்கல், மதுரை-பழநி, மதுரை -புனலூர் உள்ளிட்ட பல ரயில்கள் கடந்த 19 மாதங்களாக இயக்கப்படவில்லை. ஆனால், எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை மட்டும் படிப்படியாக அதிகரித்து வந்தன.

சாதாரண கட்டணத்தில் உள்ள பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கும், தென்னக தெற்கு ரயில்வேக்கும் மதுரை எம்.பி வெங்கடேசன், கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தார். கடிதத்தில், ‘விரைவு ரயில் வண்டிகளில் பொது பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், பயணிகள் ரயில் வண்டிகளை இயக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது, சில பயணிகள் ரயில்களுக்கும், பொது பெட்டிகளை கொண்ட சில விரைவு வண்டிகளுக்கும் தென்னக ரயில்வே அனுமதித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் இடையே நாளை (7ம் தேதி) முதல் தினமும் 10 முன்பதிவில்லா பொது பெட்டிகளுடன் விரைவு ரயில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரை-ராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயில், கோவை-மன்னார்குடிக்கு இடையே பயணிகள் ரயில் நாளை முதல் தினந்தோறும் இயக்கப்பட உள்ளன. மேலும் மதுரையில் இருந்து புனலூருக்கும், திருவனந்தபுரத்திற்கும் பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரை-ராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் துவங்கவுள்ளது. இந்த ரயில் தினமும் ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரையை வந்தடையும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 6.53 மணிக்கு ராமநாதபுரத்திற்கும், காலை 7.28 மணிக்கு பரமக்குடிக்கும், 8 மணிக்கு மானாமதுரைக்கும், 8.35க்கு திருப்புவனத்திற்கும் வருகிறது. பின்னர் மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே மார்க்கத்தில் ராமேஸ்வரத்திற்கு இரவு 10.05 மணிக்கு சென்றடைகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மதுரை-ராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Rameswaram ,Madurai , Train
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...