சிதம்பரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய் உயிரிழந்துவிட்டதாக இளைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன், இவரது மனைவி செந்தாமரைச்செல்வி. இவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி கோதண்டராமன் இறந்துவிட்டதாகவும் அதன்பிறகு செந்தாமரைச்செல்வி தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், மூச்சு நின்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரது மகன் சீனிவாஸ் மருத்துவர்களை அழைத்திருக்கிறார். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாத போது அவரது சகோதரி ஸ்ரீதேவி மூலமாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் தாயை காப்பாற்ற முயற்சித்ததாகவும் ஆனால் அங்கு செவிலியர்களோ மருத்துவர்களோ இல்லை என்று சீனிவாஸ் தரப்பில் வீடியோ பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பிறகு நள்ளிரவு 2 மணிக்கு பிறகு வேறொரு மருத்துவர் வந்து சோதித்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுசம்மந்தமாக அந்த சமயத்தில் அவர் ஒரு வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டப்போது இந்த வீடியோ தொடர்பாகவும், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் உண்மை வெளிவரும். அதன்படி யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக எந்தவிதமாக புகாரும் காவல்துறையில் குடும்பத்தினர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>