×

அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள்!: காவல் வாகனத்தில் ஏறி செல்ல மறுத்து லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி திடீர் தர்ணா..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பத்திரிகையாளரும் பலியாகியுள்ளார். மொத்தம் 8 பேர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர். விவசாயிகள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு, உ.பி. அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்து விருந்தினர் மாளிகையில் சிறை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பொறுத்தவரை இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசுகையில், அகம்பாவத்தால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. மத்திய அரசு மட்டுமின்றி உ.பி. பாஜக அரசின் இந்த போக்கு என்பது சட்டவிரோதமானது. கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

விவசாயிகளின் குடும்பத்தாரை நேரடியாக சென்று ஆறுதல் கூற அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில்,லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் லக்னோ விமான நிலையம் சென்றடைந்தார். இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து சொந்த வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் ராகுல்காந்தி விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பாதுகாப்பு அலுவலர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, எனக்கு வாகனம் ஏற்பாடு செய்து தர நீங்கள் யார்? என்னுடைய சொந்த காரில் தான் செல்வேன்என பாதுகாப்பு அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல் பேசியதாவது, சொந்த வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறை வாகனம் மூலமாகவே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என கெடுபிடி விதிக்கின்றனர். காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி காவல்துறையினர் வேறு ஏதோ திட்டமிடுகிறது. லக்கிம்புர் செல்ல முதலில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மறுக்கப்படுகிறது. நான் விமான நிலையத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் ஆனால் அவர்கள் என்னை வெளியேற அனுமதிக்கவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள் என்று குறிப்பிட்டார். ராகுல் காந்தியுடன் பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில முதலைமைச்சர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Rahul Gandhi ,Lucknow airport , Own vehicle, UP. Police, Lucknow Airport, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…