கன்னியாகுமரியில் கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் உள்ள ஏடிஎம்மிற்கு ஜோக்கர் முகமூடி அணிந்து குடைப்பிடித்தப்படி வந்த 2 மர்மநபர்கள் கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த ஒரு மாதத்தில் 3 இடங்களில் இதுபோன்ற திருட்டு முயற்சி நடந்துள்ளது. நித்திரவிளையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவு இரண்டு பேர் ஜோக்கர் முகமூடி அணிந்து வருகின்றனர். குடையால் கண்காணிப்பு கேமராவை மறைத்தவண்ணம் மற்றொருவர் கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி செய்கிறார். அந்த கட்டிங் மெஷினை கூட அருகில் உள்ள இரும்பு பொருட்கள் விற்கும் கடையில் இருந்து தான் திருடி வந்துள்ளனர். ஏடிஎம் மெஷினை முழுமையாக உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி செல்கின்றனர். சுமார் 1 கி.மீ.க்கு முன்பிருந்தே அவர்கள் குடை பிடித்தபடி வரும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜோக்கர் முகமூடி அணிந்து மட்டுமல்லாமல் முழுமையாக முகத்தை மூடிய வண்ணமும், கருப்பு உடை அணிந்த வண்ணமும் 3 இடங்களில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது 3 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரேநபர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>